Archive

Archive for the ‘பயணம்’ Category

ஒரிசா – 3 – புவனேஸ்வரில்

புவனேஸ்வரில் பார்க்க வேண்டிய இடங்களை கூகிளிட்டாலே வண்டி வண்டியாகக் கிடைக்கும் .  நான் சொல்ல விரும்புவது கொஞ்சம் வித்தியாசமான அனுபவங்களையும் நான் செய்த தவறுகளையும்.

புவனேஷ்வரை நீங்கள் ஒரிசா அரசு சுற்றுலாத்துறையின் ” Conducted Tour ” மூலமாகவே சுற்றுவது நல்லது . ( பெரும் பணக்காரர்களை விட்டு விடலாம் , அவர்கள் இந்த பிளாக்கை படிக்கப் போவதில்லை ) .

காரணம் உண்டு , புவனேஸ்வரின் தவற விடக் கூடாத இடங்கள் என்று பார்த்தால் , அவை நகரத்தின் நாலா பக்கமும் கிடக்கும் . நந்தன் கானன் Zoo வும் கந்தகிரிக் குன்றுகளும் ஒருபுறம் , லிங்கராஜ் கோவில் ஊருக்கு உள்ளே , ராஜா ராணி கோவில் பூரி போகும் வழியில் , Dhauli குன்றுகள் ஊரை விட்டு தூரத்தில் பூரி போகும் சாலையில் இருந்து 3 1/2 கிலோமீட்டர் உள்ளே . நீங்கள் தனியாகவோ அல்லது பட்ஜெட் டூர் ஆகவோ பயணம் மேற்கொண்டால் Conducted Tour சிறந்தது. ஒரு கைடும் கிடைப்பார் .

ஒரிய அரசின் சுற்றுலாத் துறை அலுவலகம் , ” பந்தா நிவாஸ் ” ( விருந்தினர் விடுதி ) வளாகத்திலேயே உள்ளது. நான் எப்படி ஏமாந்தேன் என்று சொல்கிறேன். நான் போனது ITI களில் ஆளெடுக்க , அவை வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே . அதனால் சனி ஞாயிறு இரண்டு நாளும் சுற்றலாமே என்று திட்டமிட்டு , வியாழக்கிழமையே   பந்தா நிவாஸ் அலுவலகத்திற்கு போன் பண்ணி சனிக் கிழமை டூர் பேகேஜில் பதிவு செய்தேன் .  ஞாயிற்றுக் கிழமை எல்லா இடங்களிலும் கூட்டமாக இருக்கும் , அதனால சும்மா லோகலில் சுற்றி விட்டு சாப்ட்டுட்டு தூங்கலாம் என்று பிளான். போனை எடுத்தவரும் என் பெயர் , விவரங்கள் கேட்டு விட்டு காலையில எட்டரை மணிக்கிட்ட வந்திருங்க என்றார் .

சனிக் கிழமை போனால் , ” உங்க பேரே இல்லையே , யார்ட்ட சொன்னீங்க ” என்றார்கள் . எனக்கு பேசியவரின் பெயர் தெரியாது . வாதாடிப் பார்த்து விட்டு , கடைசியில் ஒரு சீட் கூட இல்லையா ? என்று கெஞ்சும் நிலைமைக்கு வந்து விட்டேன் . இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள். அடுத்த நாளும் Full . அதற்கடுத்த சனிக்கிழமைக்குப் பதிவு செய்துவிட்டு ( மறக்காமல் அந்த ஆளின் பெயரையும் தெரிந்துகொண்டு ) , வெறுத்துப் போய் வெளியே இருந்த மியுசியத்தைப் போய் பார்த்து விட்டு ரூமுக்குப் போய் தூங்கி எந்திரிச்சி , மத்தியானம் Dhauli க்குப் போக முடிவு செய்தேன்.

Advertisements
Categories: பயணம்

முதல் விமானப்பயணம்

பயணங்கள் இன்னைக்கு தவிர்க்கவே முடியாததாக ஆகி விட்டன. எந்த நேரத்திலேயும் திடீர்னு உத்தரவு வரும்.

2007 ல, நான் பழைய கம்பெனில வேல பாத்துக்கிட்டு இருந்த போது , லீவுக்கு வீட்டுக்கு வந்துட்டு திரும்பி பிலாய் ( சத்தீஸ்கர் ) போய்க்கிட்டு இருந்தேன். திருவனந்தபுரம் – கோர்பா எக்ஸ்பிரஸ் , சென்னையில நானும் ஆல்பர்ட்டும் ஏறினோம். ஆல்பர்ட் என் கூட வேலை பார்க்கிற Quality control இன்ஸ்பெக்டர். வண்டி வாரங்கல் தாண்டி போய்க்கொண்டிருந்த போது எங்க சுதாகர் சார் போன் அடிச்சார் .

” தம்பி , நேரா பிலாய் போன உடனே கல்கத்தாவிற்கு கிளம்பிரு . அந்த கம்பனிக்காரன் என்ன செஞ்சிக்கிட்டிருக்கான்னே தெரியலை.  நாளக்களிச்சி காலையில நீ அங்க இருக்கணும்”  என்றார்.

எனக்கு சந்தோசம், எப்படியாவது கல்கத்தா போகணும், நல்லா அந்த ஊரைச்சுத்தணும்னு நெனச்சதுக்கு இப்ப ஒரு சந்தர்ப்பம்.

” ம் சரி சார் நாளைக்கே கிளம்பிடுறேன் ” என்றேன்.

“யோவ் போகும் போது ஆல்பர்டையும் கூட்டிக்கிட்டு போ , ஆல்பர்ட் கொடுக்கிற ரிப்போர்ட் ரொம்ப முக்கியம் ,CEO கேக்குறார் ” என்றார்.

” CEO வா, அடக்கடவுளே அப்போ பெரிய பிரச்சனையா இருக்குமோ”- நான்.

” அதை பாக்கதுக்குத்தான் உன்னைய அனுப்பறது , கல்கத்தா போயிட்டு கால் பண்ணு ” – சுதாகர் சார்.

பிலாய் போய்ச்சேர ராத்திரி ரெண்டு மணி ஆயிருச்சி. அதனால அடுத்த நாள் காலையில எங்களுக்கு சாப்பாடு செஞ்சு தர்ற பெங்காலி வீட்டுலேயே டிக்கட் தேடினோம். இன்னைக்கு சாயங்காலம் கிளம்புற ரயிலுக்கு இன்னைக்கு காலையில எந்த ஊரில டிக்கெட் இருக்கும். ஒரு டிக்கெட்டும் கிடையாது. ஆனால் தட்காலில் நாளைக்கு ( அடுத்த நாள் ) சீட் இருக்கு. உடனே சுதாகர் சாருக்கு போன் அடிச்சேன்.

“நாளைக்கு போனா பரவாயில்லையா சார் “.

“அதை நான் சொல்ல முடியாது. CEO க்கு அடிச்சு பேசு. நம்பர் வச்சிருக்கியா ? ”

“சார், அவர்ட்ட எப்படி சார் பேசுறது ? ”

” ம் சரி நீ புக் பன்னிரு , பிறவு இதுவும் போயிரும் . நான் அவரை பாத்து சொல்லிடறேன்”.

புக் பண்ணியாச்சு. கிளம்பி பிலாயில இருக்கிற கம்பெனிக்கு Inspection பாக்க போய்ட்டோம்.

ஒரு பன்னிரெண்டு மணி இருக்கும். சுதாகர் சார் லைனில் வந்தார். “தம்பி , நாளைக்கு காலையில நீ கல்கத்தாவில இருந்தாகணும். CEO பயங்கர டென்சன் ஆயிட்டார்.”

“சார்,  டிக்கெட் இல்லை சார்.”

“Flight ல போய்யா. CEO கஸ்டமருக்கு கமிட்மென்ட் கொடுக்கணும் அதனால அவங்கள Flight  ல போகச்சொல்லுனு சொல்லிட்டார்”

எனக்கு அப்பவே பறக்குற மாதிரி இருந்தது. பெறவு Flight அ பக்கத்துல போய்க்கூட பார்த்தது கிடையாது. இருக்காதா பின்ன.

“டிக்கெட் இருக்கான்னு பாரு , இல்லன்ன ஏர்போர்ட்ல போய் எடுத்துக்க” என்றார்.

நம்ம எப்படி விவரம். உடனே போய் அந்த கம்பெனி ஓனர் ( பெரிய ஆள். ரொம்ப பொறுமையான மனுஷன் . இல்லன்ன நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்வாரா ? என்ன கேள்வின்னு கேக்குறவுங்க , அப்படியே கண்டினியு பண்ணுங்க. ) வச்சிருந்த கம்ப்யுடர்ல Flight டிக்கெட் பாக்க சொன்னேன்.

“கல்கத்தாவுக்கு போவனும் , இன்னக்கு சாயங்காலமே. எவ்வளுவு ஆகும்னு லேசா பாத்து சொல்லுங்களேன்”.

பாத்தார். “ஒரே ஒரு கிங் பிஷர் உண்டு. சாயங்காலம் அஞ்சரை மணிக்கு. டிக்கெட் இப்ப ரெண்டு பேருக்கு பதினோராயிரம் ரூபாய் , உடனே புக் பண்ணுங்க சார். Few Seats Left நு காட்டுது”.

” இப்ப கைல காசு இல்ல . நாளைக்கு தான் கிளம்புறதா இருந்தது ” –  நான்.

“அதனால என்ன ? நான் வேண்ணா என் கிரெடிட் கார்டு மூலமா பண்றேன். நீங்க திரும்பி வந்து கூட, கொடுங்க ” என்றார்.

மரியாதையா சரின்னு சொல்லி இருக்கலாம். நம்ம வாய்க்கொழுப்பு விடுமா.

” பரவாயில்ல சார். என் அக்கவுண்ட்ல பணம் இருக்கு. நான் ஏர்போர்ட்ல போயி டிக்கெட் எடுத்துக்கிறேன்.  சார் ஒரு சந்தேகம் , இப்ப நான் போகும் போது டிக்கெட் ( Few seats உம் காலியாகி )  Waiting லிஸ்ட்ல இருந்துச்சின்னா Flight ல இருக்கிற TTE கன்பார்ம் பண்ணித்தருவாரா ? ” என்றேன்.

கம்பெனி ஓனர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ” நீங்க இப்பதான் முதமுதலா Flight ல போறிங்களா ?  ”

“ஆமா ”

” நீங்க சொல்ற மாதிரி இல்ல. Flight வேற மாதிரி சிஸ்டம். சீக்கிரமா கெளம்புங்க. பிலாயில இருந்து ஏர்போர்ட் போக எப்படியும் ரெண்டு மணிநேரம் ஆயிரும். ”

அவசர அவசரமாக வீட்டுக்கு போய் குளிச்சு மொழுகி , ஒரு டாக்ஸிய வரவழச்சு வீட்டை பூட்டும் போதே மணி ரெண்டே கால்.  போற வழியில் ATM இல் பணம் எடுத்துவிட்டு ( பதிமூன்றாயிரம் , கூடுதலா காசு வச்சிருக்கிறது எப்பவுமே நல்லது ) , டாக்சிக்கு டீசல் போட்டுவிட்டு ராய்ப்பூரின் ஆகக்கடைசியில் இருந்த ஏர்போர்ட்டை அடையும் போது மணி நான்கு நாற்பது. அப்போது அரைமணி நேரம் இருக்கும் வரை செக் இன் பண்ண முடியும். இப்போது தான் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு முன்னாலேயே வந்து விடவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

நிதானமாக கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஆபீசுக்கு போனோம். அங்கிருந்த பெண்ணிடம் ரெண்டு கல்கத்தா என்றேன். அந்த பெண்ணும் நிதானமாக பதினைந்தாயிரத்து  எழுநூறு என்றாள்.

” எப்பிடி ? அப்பல பதினோராயிரம் தானே இருந்தது ”

” அது அந்த நேர சீட் ரேட். இப்ப இந்த ரேட் சீட் தான் இருக்குது ”

” என்ன ஆச்சு சட்டநாதன். Fight ல சீட் இல்லையா ” – ஆல்பர்ட்

” சீட் எல்லாம் இருக்கு , ஆனால் இந்த பொண்ணு ரேட் கூடுதலா சொல்லுது ” மறுபடியும் அந்த பெண்ணிடம் ” ஏங்க எங்களுக்கு பிசினஸ் கிளாஸ் எல்லாம் வேண்டாம் , சாதாரண எகானமி கிளாஸ் போதும் ” என்றேன்.

” ஹலோ ! பிசினஸ், எகானமி கிளாஸ் பத்தில்லாம் தெரியுது , நேரம் ஆக ஆக விலை கூடும்கிறது தெரியாதா ? இது எகானமி கிளாஸ் ரேட் தான் ” என்று சொல்லிவிட்டு வேற பக்கம் பார்த்து சிரித்தாள்.

” ஆல்பர்ட் உங்ககிட்ட  எவ்வளுவு இருக்கு ? ”

” என்னோட அட்வான்ஸ் அமவுண்ட இன்னைக்கு தான் பிரகாஷ் வாங்கி இருக்காரு . நாளைக்குதான் பாங்க்ல போடுவாரு. டாக்சிக்கு கொடுத்தது போக , கைசெலவுக்கு ஒரு எண்ணூறு ரூவா இருக்கு.  ”

சரி ATM மெசின் எங்க இருக்கு என்று அந்தப்பெண்ணிடம் கேட்டேன் . சத்தியமாக நம்புங்கள் 2007 இல் ராய்பூர் ஏர்போர்ட்டில் ATM மெசின் ஒன்று கூட இல்லை . பணம் எடுக்க வேண்டும் என்றால் ஆறு கிலோமீட்டர் வெளியே போக வேண்டும். டாக்ஸிய வேற திருப்பி அனுப்பிட்டோம்.

அந்த பெண்ணிடம் நான் போய் பணம் எடுத்து விட்டு வந்து விடட்டுமா என்று கேட்டேன் .

” சார் இன்னும் இருபது நிமிடங்களில் செக் இன் ஆரம்பித்து விடும். அதற்கு பிறகு டிக்கெட் தர மாட்டோம். நீங்க போய் வர எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேலாகிவிடும். ATM இல்  பணம் இருக்கோ இல்லையோ ? உங்களிடம் கார்டு இல்லையா ? ”

” ஆ! கார்டு ! அது தான் இருக்கிறதே ”

” அப்படின்னா அதை கொடுங்கள் ”

நான் என்னோட இந்தியன் பேங்க் டெபிட் கார்டை கொடுத்தேன் .

” இது இல்ல சார். மாஸ்டர் கார்டு / விசா கார்டு மாதிரி ”

” அதெல்லாம் என்கிட்ட இல்லையே, ஆல்பர்ட் நீங்க வச்சிருக்கீங்களா ? ”

” சும்மா விளையாடாதீங்க சட்டநாதன். எனக்கு எதுக்கு அதெல்லாம் ” – ஆல்பர்ட்.

இதற்குள் இன்னொரு அழகி வந்து சேர்ந்தார். பழையவர் நடந்த கதையை சுருக்கமாக சொன்னவுடன் சின்ன புன்னகை ஒன்றை உதிர்த்தார்.

சிரிக்கிறீர்களா ! நாசமாக போகிற கிங் பிஷர் அழகிகளா ! எனக்கு இப்போது கல்கத்தா போயே ஆக வேண்டும்.

” இந்த ரேட் டிக்கெட் தான் சார் இருக்கிறது ”

” மேடம் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா ?” என்றேன்.

” சொல்லுங்கள் , We are here to Help you ? ”

” இப்போது Balance அமவுண்டை நீங்கள் போடுங்கள். நான் கல்கத்தாவில் போய் இறங்கிய உடனே உங்களுடைய ஆபிசில் கொடுத்து விடுகிறேன். கல்கத்தா ஏர்போர்ட்டில் நிச்சயம் ATM மெசின் இருக்கும். பணம் எல்லாம் இருக்கிறது , கையில் தான் இல்லை ”

தங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக இப்படி ஒரு கஸ்டமரை கண்ட அதிர்ச்சியில் ,  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ” Kya ( என்ன ? ) ” என்றார்கள்.

” நிஜமாகத்தான். வேணும்னா நான் பணம் கொடுத்து முடிக்கிற வரைக்கும் என்னோட பெட்டிய தர வேண்டாம் ”

ரெண்டு பேரும் பக்கத்து ரூமில் இருந்த ஆபிசரை பார்க்க வேண்டும் , அவரிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என்றார்கள்.

நானும், ” சரி பார்த்து நல்ல முடிவாக சொல்லுங்கள் ” என்றேன்.

” எவ்ளோ குறையுது ? ” என்றவரிடம்

” ஆயிரம் ரூபாய் ” என்றேன்.

இதற்கு நடுவில் , ” சட்டநாதன் , நான் வேணுமின்னா நாளைக்கு புக் பண்ணின தட்கல் டிக்கெட்டிலேயே ரயிலில் வந்து விடுகிறேன் . நீங்க மட்டும் ப்ளேன்ல போங்க. ”

” அட சும்மா இருங்க ஆல்பர்ட் . நாம Flight ல  போறதே , உங்க ரிப்போர்ட் உடனே வேணுங்கிரதுக்காகத்தான். உங்களை விட்டுட்டு நான் மட்டும் போய் என்ன செய்றது , சுதாகர் சார் தொலச்சிருவார். சும்மாவே நிறைய வாங்கிக்கட்டிக்குவேன் , இதில அவர் Flight  அப்ரூவல் கொடுத்து , நான் மாங்கா மாதிரி ஏதாவது செஞ்சா கேட்கவே வேண்டாம். ”

ரெண்டு நிமிசத்துக்கு பிறகு முதலில் பேசிய பெண் உற்சாகமாக வந்தார்.

” பேசிவிட்டேன் சார் , நீங்கள் ஆயிரம் ரூபாயை கல்கத்தாவிலே கொடுத்தால் போதும் இப்போது பணம் கொடுங்கள் , டிக்கெட் தருகிறேன் ” என்றார்.

நானும் மகிழ்ச்சியோடு, ஆல்பர்டிடம் இருந்து மீதத்தை வாங்கி பதிமூன்றாயிரத்து எழுநூறு ரூபாய நீட்டினேன்.

அந்த பெண் எண்ணிப்பார்த்து விட்டு ” ரெண்டாயிரம் குறைகிறது ? ”

” நான்தான் சொன்னேனே ”

” நீங்கள் ஆயிரம் ரூபாய் தானே குறைகிறது என்றீர்கள். ஆயிரம் ரூபாய்க்குத்தான் பெர்மிசன் வாங்கி இருக்கிறேன் ” என்றார்.

” ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் குறைகிறது ”

அந்த பெண் என்னை பரிதாபமாக பார்த்தாள்.

” என்ன சட்டநாதன் இப்படி ஆயிருச்சு ” – ஆல்பர்ட்

” கம்யுநிகேசன் கேப் ” என்றேன்.

நானும் அந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நின்றோம்.

இதற்குள் இரண்டாவதாக வந்த பெண் மீண்டும் உள்ளே வந்து என்ன நடந்தது என்றார்.

விவரம் சொன்னவுடன் , பரவாயில்லை Really You are Lucky . இப்போது ஒருவர் நான்காயிரம் ரூபாய் டிக்கெட் ஒன்றை கேன்சல் செய்து இருக்கிறார். அதை உங்களுக்கு தரலாம்.                   ( இப்படியும் உண்டாம் ) ஒருவருக்கு ஏழாயிரத்து என்னூற்றியம்பது , இன்னொருவருக்கு நான்காயிரத்து இருநூறு . மொத்தமாக பன்னிரண்டாயிரத்து ஐம்பது மட்டும் கொடுங்கள் என்று எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்.

செக் இன் முடித்து விமானத்தில் ஏறி ஜன்னலோர சீட்டில் உக்காந்து, கீழ பாத்துக்கிட்டு இருந்தேன்.

நம்ப முடியாமல் உட்கார்ந்திருந்தார் ஆல்பர்ட்.

சித்திரவீதிக்காரன்

மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்

வண்ணதாசன்

வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)

நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.

சொல் புதிது!

கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவட்டும்!

மனம் போன போக்கில்

N. Chokkan (என். சொக்கன்)