Archive

Archive for the ‘புத்தகங்கள்’ Category

புத்தகங்கள்

இப்போது எழுதும் பதிவுகள் எல்லாம்  அசின் சாராலோ, ரஞ்சித்தாலோ தூண்டி விடப்பட்டதால் எழுதப்படுகின்றன .

அதனால் என்ன ? ஆசிரியரும் நண்பரும் நம்மைத் தூண்டிவிட்டு வழிநடத்துபவர்கள் தானே. இன்று ரஞ்சித் புத்தகங்கள் பற்றி எழுதியதைப் படித்தபோது பல்வேறு நினைவுகள்.

மறக்கமுடியாததைச்  சொல்கிறேன். அசின் சார் வீட்டில் ஒரு அருமையான நூலகம் உண்டு. இலக்கியம் தவிரவும் பல தரப்பட்ட Subject Books . பழைய சுபமங்களா இதழ்கள்.

ஏராளமான காமிக்ஸ் புத்தகங்களை எனக்கே கொடுத்திருக்கிறார். வீட்டு நூலகம் தான் , என்றாலும் அவற்றை அட்டவணைப்படுத்த விரும்பி புத்தகங்களை பைன்ட் செய்து லேபில் ஒட்டி நூலின் பெயர் , ஆசிரியர் பெயர் எல்லாம் எழுதி வைக்கும் பணியை எங்களிடம் கொடுத்தார்.

நான் , சதீஷ் குமார் , கணேஷ் குமார் இன்னும் சில நண்பர்கள் உற்சாகமாக அவற்றைச் செய்தோம். ஒரு வகையில் அத்தனை புத்தகங்களை , இலக்கியவாதிகளின் பெயர்களை இப்படித்தான் பரிச்சயப்படுத்திக்கொண்டோம். பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்று பார்த்தால் கூட எது யாருடைய கையெழுத்து என்று என்னால் சொல்லிவிடமுடியும்.

தரமான எழுத்தை மட்டும் தான் படிப்பது என்ற கொள்கை கொண்ட நீதிமாணிக்கம் சார் இன்னுமொரு தூண்டுதல் .

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். அசின் சாரிடம், ”  இத்தனை புத்தகங்களை ஏன் வாங்க வேண்டும் , நம்ம ஊர் லைப்ரரிலே மெம்பர் ஆனாப்போதுமே ” என்றேன்.

அவர்,  ” சட்டம் , நல்ல புத்தகங்கள் எப்பவும் கூடவே இருக்கணும். லைப்ரரிலே மிஞ்சிப்போனா நாலு புக் எடுக்கலாம் , அதுலயும் முக்கியமான புக்கை Reference Section ல வச்சிருப்பாங்க. நமக்கு நேரம் கிடைக்கும் போது விரும்புன புத்தகம் கையில இருக்காது . அதனால முக்கியமான புத்தகங்கள் நம்ம வீட்டிலேயே இருக்கறதுதான் வசதி ” என்று சொல்லி விட்டு ,

புத்தகங்கள் மட்டும் தான் நமக்கு நல்ல நண்பர்களாக இருக்க முடியும் . நல்ல நண்பர்கள் என்று நாம் நினைக்கும் மனிதர்கள் சிலசமயம் நம்மைப் புண்பட வைக்கும் சொற்களைப் பேசிவிடுவார்கள் , செயல்களைச் செய்துவிடுவார்கள். ஆனால் ஒரு நல்ல புத்தகம் எப்போதும் நல்ல விஷயங்களையே பேசும் , நம்மை உற்சாகப்பட வைக்கும் , காயப்படுத்தாது “ என்றார்.

இது என் மனதில் தங்கி விட்டது.

இது நடந்தது நான் பள்ளியில் படிக்கும் போது . ஒருநாள் அரசு நூலகத்திற்குப் போய்விட்டு வரும் போது என்னோடு படிக்கும் ஒரு மாணவன் எதிர்ப்பட்டான். அவனுக்கு சம்பகுளமோ , சாயமலையோ . ஆனால் கழுகுமலைக்கு தெக்க தான் .

இப்ப பெயர் மறந்துவிட்டது , முகம் ஞாபகத்தில் இருக்கிறது . ஆனால் காமர்ஸ் க்ரூப்காரன் .    ” என்னடே எப்பவும் படிப்பு தானா , அப்படி என்ன தான் இருக்கு அந்தப் புத்தகத்திலே ” என்றான்.

அவனுக்கு நான் அசின் சார் சொன்னதைச் சொன்னேன். புத்தகம் தான் நமக்கு நல்ல நண்பனாக இருக்கமுடியும் என்று . அவன் ஒன்றும் சொல்லவில்லை , விடைபெற்றுப் போய்விட்டான் .

பிறகு நான் எஞ்சினியரிங் முடித்து , திருச்சியில் சிதார் வெசல்சில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன் . ஊருக்கு வந்த ஒருமுறை அவன் எதிர்ப்பட்டான் .

வழக்கமான நலம் விசாரிப்புகள் . கொஞ்சநேரம் பேசாமல் நின்றோம் . நான் கிளம்பத் தயாரானேன்.

” சட்டநாதா , நீ ஒருவாட்டி சொன்ன , ஞாபகத்தில் இருக்கா ? புத்தகம் தான்  நமக்கு நல்ல நண்பன் , கூடப் படிக்கிற பசங்க கூட நம்மளை ஏதாவது திட்டிரலாம் , வஞ்சிரலாம் . ஆனால் ஒரு நல்ல புத்தகம் எப்பவும் நம்மிடம் நல்ல வார்த்தைகளையே பேசும்னு ” என்றான் .

ஆச்சரியம் அடைந்தேன், அவனிடம் இதைச்சொல்லி ஆறு , ஏழு வருசங்கள் இருக்கும் .

” அதை அசின் சார் ஒருவாட்டி சொன்னாரு ” என்றேன் .

” ஆனால் எப்பவாவது புத்தகங்கள் பற்றிப் பேசும் போது , நீ சொன்னதுதான் ஞாபகத்துக்கு வரும் ” என்றான் .

என்னை அந்த ஒரு வாக்கியமாக மட்டும் தான் அவன் நினைவில் வைத்திருக்கிறான். என்னைப் பற்றிய வேறு எந்த தகவலும் அவனுக்கு முக்கியம் இல்லை .

புத்தகங்கள் இப்படித்தான் வாழ்கின்றனவா ?

Advertisements
சித்திரவீதிக்காரன்

மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்

வண்ணதாசன்

வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)

நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.

சொல் புதிது!

கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவட்டும்!

மனம் போன போக்கில்

N. Chokkan (என். சொக்கன்)