வாழ்த்துக்கள் ரஞ்சித் !!!

நமது நண்பர் ரஞ்சித் , ஒற்றையடிப் பாதையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் தனது பயணத்தைத் தொடர இருக்கிறார்.

களிப்போடும் கனவுகளை மெய்ப்படுத்திக் கொண்டும் தனது பயணத்தை நல்ல விதமாகத் தொடர , அவரது நிச்சயதார்த்தம் முடிந்த இந்த நல்ல வேளையில் வாழ்த்துகிறேன்.

Advertisements

புத்தகங்கள்

இப்போது எழுதும் பதிவுகள் எல்லாம்  அசின் சாராலோ, ரஞ்சித்தாலோ தூண்டி விடப்பட்டதால் எழுதப்படுகின்றன .

அதனால் என்ன ? ஆசிரியரும் நண்பரும் நம்மைத் தூண்டிவிட்டு வழிநடத்துபவர்கள் தானே. இன்று ரஞ்சித் புத்தகங்கள் பற்றி எழுதியதைப் படித்தபோது பல்வேறு நினைவுகள்.

மறக்கமுடியாததைச்  சொல்கிறேன். அசின் சார் வீட்டில் ஒரு அருமையான நூலகம் உண்டு. இலக்கியம் தவிரவும் பல தரப்பட்ட Subject Books . பழைய சுபமங்களா இதழ்கள்.

ஏராளமான காமிக்ஸ் புத்தகங்களை எனக்கே கொடுத்திருக்கிறார். வீட்டு நூலகம் தான் , என்றாலும் அவற்றை அட்டவணைப்படுத்த விரும்பி புத்தகங்களை பைன்ட் செய்து லேபில் ஒட்டி நூலின் பெயர் , ஆசிரியர் பெயர் எல்லாம் எழுதி வைக்கும் பணியை எங்களிடம் கொடுத்தார்.

நான் , சதீஷ் குமார் , கணேஷ் குமார் இன்னும் சில நண்பர்கள் உற்சாகமாக அவற்றைச் செய்தோம். ஒரு வகையில் அத்தனை புத்தகங்களை , இலக்கியவாதிகளின் பெயர்களை இப்படித்தான் பரிச்சயப்படுத்திக்கொண்டோம். பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்று பார்த்தால் கூட எது யாருடைய கையெழுத்து என்று என்னால் சொல்லிவிடமுடியும்.

தரமான எழுத்தை மட்டும் தான் படிப்பது என்ற கொள்கை கொண்ட நீதிமாணிக்கம் சார் இன்னுமொரு தூண்டுதல் .

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். அசின் சாரிடம், ”  இத்தனை புத்தகங்களை ஏன் வாங்க வேண்டும் , நம்ம ஊர் லைப்ரரிலே மெம்பர் ஆனாப்போதுமே ” என்றேன்.

அவர்,  ” சட்டம் , நல்ல புத்தகங்கள் எப்பவும் கூடவே இருக்கணும். லைப்ரரிலே மிஞ்சிப்போனா நாலு புக் எடுக்கலாம் , அதுலயும் முக்கியமான புக்கை Reference Section ல வச்சிருப்பாங்க. நமக்கு நேரம் கிடைக்கும் போது விரும்புன புத்தகம் கையில இருக்காது . அதனால முக்கியமான புத்தகங்கள் நம்ம வீட்டிலேயே இருக்கறதுதான் வசதி ” என்று சொல்லி விட்டு ,

புத்தகங்கள் மட்டும் தான் நமக்கு நல்ல நண்பர்களாக இருக்க முடியும் . நல்ல நண்பர்கள் என்று நாம் நினைக்கும் மனிதர்கள் சிலசமயம் நம்மைப் புண்பட வைக்கும் சொற்களைப் பேசிவிடுவார்கள் , செயல்களைச் செய்துவிடுவார்கள். ஆனால் ஒரு நல்ல புத்தகம் எப்போதும் நல்ல விஷயங்களையே பேசும் , நம்மை உற்சாகப்பட வைக்கும் , காயப்படுத்தாது “ என்றார்.

இது என் மனதில் தங்கி விட்டது.

இது நடந்தது நான் பள்ளியில் படிக்கும் போது . ஒருநாள் அரசு நூலகத்திற்குப் போய்விட்டு வரும் போது என்னோடு படிக்கும் ஒரு மாணவன் எதிர்ப்பட்டான். அவனுக்கு சம்பகுளமோ , சாயமலையோ . ஆனால் கழுகுமலைக்கு தெக்க தான் .

இப்ப பெயர் மறந்துவிட்டது , முகம் ஞாபகத்தில் இருக்கிறது . ஆனால் காமர்ஸ் க்ரூப்காரன் .    ” என்னடே எப்பவும் படிப்பு தானா , அப்படி என்ன தான் இருக்கு அந்தப் புத்தகத்திலே ” என்றான்.

அவனுக்கு நான் அசின் சார் சொன்னதைச் சொன்னேன். புத்தகம் தான் நமக்கு நல்ல நண்பனாக இருக்கமுடியும் என்று . அவன் ஒன்றும் சொல்லவில்லை , விடைபெற்றுப் போய்விட்டான் .

பிறகு நான் எஞ்சினியரிங் முடித்து , திருச்சியில் சிதார் வெசல்சில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன் . ஊருக்கு வந்த ஒருமுறை அவன் எதிர்ப்பட்டான் .

வழக்கமான நலம் விசாரிப்புகள் . கொஞ்சநேரம் பேசாமல் நின்றோம் . நான் கிளம்பத் தயாரானேன்.

” சட்டநாதா , நீ ஒருவாட்டி சொன்ன , ஞாபகத்தில் இருக்கா ? புத்தகம் தான்  நமக்கு நல்ல நண்பன் , கூடப் படிக்கிற பசங்க கூட நம்மளை ஏதாவது திட்டிரலாம் , வஞ்சிரலாம் . ஆனால் ஒரு நல்ல புத்தகம் எப்பவும் நம்மிடம் நல்ல வார்த்தைகளையே பேசும்னு ” என்றான் .

ஆச்சரியம் அடைந்தேன், அவனிடம் இதைச்சொல்லி ஆறு , ஏழு வருசங்கள் இருக்கும் .

” அதை அசின் சார் ஒருவாட்டி சொன்னாரு ” என்றேன் .

” ஆனால் எப்பவாவது புத்தகங்கள் பற்றிப் பேசும் போது , நீ சொன்னதுதான் ஞாபகத்துக்கு வரும் ” என்றான் .

என்னை அந்த ஒரு வாக்கியமாக மட்டும் தான் அவன் நினைவில் வைத்திருக்கிறான். என்னைப் பற்றிய வேறு எந்த தகவலும் அவனுக்கு முக்கியம் இல்லை .

புத்தகங்கள் இப்படித்தான் வாழ்கின்றனவா ?

வரலாறு போற்றுதும்! வரலாறு போற்றுதும்!

காவல் கோட்டம் சு. வெங்கடேசன் அவர்களின் நேர்காணல் ஒன்றை வாசித்தேன். நமது வரலாறு எப்படி வாய்மொழியாகவே அடுத்ததடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்லியிருந்தார். வெள்ளையருடன் போரிட்ட கதைகளை அந்தப்பெரிய மனிதர் எப்படி சொல்கிறாரோ அப்படியே ஆங்கிலேயக்குறிப்புகளும் சொல்கின்றன என்கிறார். கீழப்பாவூர் அரசு நூலகத்தில் அச்சுப்பத்திரிக்கையில் படித்தேன் , இல்லாவிட்டால் லிங்க் கொடுத்திருப்பேன்.

வாய்மொழி வரலாற்றில் உள்ள குறைகள் யாவரும் அறிந்ததே. இந்தக்காலத்தில் இத்தனை வசதிகள் இருந்தும் ,எழுத்தில் வரும் செய்திகளே மாறும்போது வாய்மொழி எல்லாம் எந்த மூலைக்கு ?

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்று நீங்கள் கேட்டால் , இந்தப்பதிவை பார்த்துவிட்டு ஏற்பட்ட மனக்குமுறலால் என்பேன். நம்முடைய ஆட்களின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாக இந்தக்கல்லறைகளை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் கூடப் பரவாயில்லை . அரசு வைத்திருக்கும் அறிவிப்பு பலகை என்ன பாவம் செய்தது ஐயா ? அதைப்போய் இப்படி உடைத்து போட என்ன அவசியம் நேர்ந்தது ?

எங்கள் நீதிமாணிக்கம் சார் ஒருமுறை கயத்தாறு அருகே ஒரு விமான ஓடுதளம்  ஒன்றை பார்த்துவிட்டு வந்ததை சொன்னார்.  இரண்டாம் உலகப்போரின் போது பயன்படலாம் என்பதற்காக கட்டப்பட்டதாம் . இன்றும் சிதிலமடையாத சிமெண்ட் பாதையை பற்றி வியப்போடு பகிர்ந்து கொண்டார். எத்தனை பேருக்கு முதலில் இந்த செய்தியே தெரியும் ? போறதெல்லாம் அப்புறம் போய்க்கிடலாம் .

வரலாறுன்னா என்ன ? ராஜா மார்களின் சண்டையும் அவர்களின் ராணிகளின் எண்ணிக்கையுமா ?

கண் முன்னே இந்தத்தடயங்களை அழிய விடுவதால் வரும் தலைமுறையினருக்கு எவ்வளவு துரோகம் செய்கிறோம் ? இந்தியாவை இந்தியர் அல்லாதவர்கள் ஆண்டார்கள் , அதுதான் இந்திய வரலாறு என்று இன்னும் எத்தனை நாளைக்குத்தான் படிக்கப்போகிறோம் ?

விஷயம் என்னவென்றால் இதற்கான விழிப்புணர்வு பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும் . ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் தான் புராதன ஓவியங்களின் மீது தங்களின் கலைத்திறனை காட்டுகிறார்கள் , குறி தவறாமல் சிலைகளின் மூக்கையும் காதையும் கல்லால் அடிக்கிறார்கள். அந்த வயது அப்படிப்பட்ட சாகசங்களை விரும்பும் . பிறகு யார் தான் அவர்களுக்கு ஹீரோவாக வாய்ப்பு தருவார்கள் . அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும் .

கல்லூரியில் எனக்கு ” Engineering Ethics  ( பொறியியல் நன்னெறி என்று வைத்துக்கொள்ளுங்களேன் ) எடுத்த விவேகானந்தன் சார் , மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டார். ” ஒரு BBA  முடித்து விட்டு MBA படித்த மேலாளர் லாபத்தைத்தான் பிரதானமாக நினைப்பார். ஆனால் ஒரு எஞ்சினியர் அப்படி இருக்கக்கூடாது , லாபத்தை விட Safety முக்கியம் . Safety  என்பது தனிமனிதரின் , அவர் கூட வேலை பார்ப்பவர்களின் , கடைசியாக இயந்திரங்களின் Safety ” என்றார்.  இதைப்பற்றி இன்னொரு நாள் விரிவாக சொல்கிறேன்.

இப்போது அவர் சொன்ன இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ” தனி மனிதர்கள் அவர்களின் சொந்த வாழ்க்கைத்தரத்தின் மீது காட்டும் அக்கறை தான் அவர்களை சமூகத்தின் மீதும் அக்கறை கொள்ளச்செய்கிறது ” என்றார். ஒரு நல்ல விலை உயர்ந்த கார் வைத்திருப்பவன் தான் Traffic விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுவான் . எதிலாவது போய் இடிச்சா அவனுக்குத் தான் இழப்பு அதிகம். செகண்ட் ஹான்டில வாங்கின டூவீலரை , மண்ணெண்ணெய் ஊத்தி ஓட்றவன் எந்த விதியை மதிப்பான் ?

நம்மிடம் உள்ளவை மதிப்பு வாய்ந்தவை என்பதை முதலில் மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும். சரித்திர மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் பற்றி போதிப்பதோடு , அந்த இடங்கள் சுற்றுலாத்தலங்களாக  மாறினால் ஏற்படும் வாழ்க்கைத்தர உயர்வு பற்றிய நம்பிக்கையையும் பெருமிதத்தையும் வளர்த்தல்  , பழம் பொருட்களின் , ஓவியங்களின்  விலையுயர்ந்த
மதிப்பு பற்றிய அறிவை ஏற்படுத்துதல் எனப் பல தளங்களில் நாம் செயல்பட்டாக வேண்டும். மாணவர்களில் இருந்து அதை ஆரம்பிப்பது சாலச்சிறந்தது.

அந்த வகையில் தமிழாசிரியர் அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது .

தரிசனங்களின் நீட்சி


காற்றில் வாழ்வைப் போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது

தேவதச்சன்

இந்த கவிதையை , ” வாழ்வை அறிந்துகொள்ள  , அதன் புறக்காரணிகளை பிடிக்கும்போது , வாழ்க்கை நழுவி விடுகிறது ” என்பது போல புரிந்து கொள்கிறேன் .  எந்த தரிசனத்தையும் புறவயமாக மட்டும் அறிந்து அதனை தரிசிக்க முடியாது. அது நழுவிச்சென்று விடும். ஆனாலும் நமது மானுட முயற்சி தளர்வதில்லை .

நடராஜ தத்துவத்தை உலகம் அவதானித்துக்கொண்டு தான் வருகிறது. ” Angels and  Demons அல்லது Davinci Code  ” படத்தில் கூட லாங்க்டனின் அறையில் நடராஜர் ஓவியம் கொண்ட புத்தகம் இருக்கும். சிறு வயதில் கதைகளை அப்படியே நம்பி சிவனின் இருபத்தி ஐந்து மாகேஸ்வர மூர்த்தங்களில் ஒன்றாக மட்டுமே நடராஜரை அறிந்திருந்தேன்.

மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கும் போது மெட்டலர்ஜி எடுத்த பிரசன்ன வெங்கடேசன் சார் நமது பாரம்பரிய உலோகவியல் அறிவைப்பற்றி பேசும் போது நடராஜரின் ஒவ்வொரு அங்கமும் ஆடுவதையும் அதை உலோகத்தில் வடித்த சிற்பியின் திறனையும் வியந்தார்.

பிரபஞ்சமே நிலையாக இல்லாமல் ஆடிக்கொண்டு தான் இருக்கிறது , ஒரு அணு கூட அசையாமல் இல்லை என்பதை தரிசித்த  நமது முன்னோர்களில் எவரோ , அவர் பெற்ற தரிசனத்தை பௌதீகமாக நடராஜர் உருவத்தின் மூலம் அமைத்திருக்கக்கூடும் .

அந்த வகையில் நமது ரஞ்சித்தின் இந்த ஓவியத்தை மானுட ஞானத்தை , தரிசனங்களின் மீது போட்டுப்பார்ப்பதின் நீட்சியாகவே காண்கிறேன் . குறிப்பாக கன சதுரத்தைச்சுற்றிய பாம்பின் தலைக்கு மேல் பறக்கும் தட்டான் பூச்சியை பார்க்கும் போதே , அசைவு தான் நினைவுக்கு வருகிறது இல்லையா ? .

Categories: கலை

வாடகை நூலகங்கள்

என்னுடைய வாசிப்பு பற்றி பிறகு சொல்கிறேன். சிலாகித்துக்கொள்ளும் அளவுக்கு நீண்ட பின்புலம் கிடையாது. உலக இலக்கியங்களெல்லாம் இனிமேல் தான் வாசிக்க வேண்டும்.

சில தற்செயல் சம்பவங்களை நினைவு கூர்கிறேன்.

நண்பர்களுக்கு ஒருவேளை பயன்படலாம் .

அப்போது நான் திருச்சியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன் . ஒருநாள் ராத்திரி மொபைல் நூலகம் ஒன்று நான் தங்கியிருந்த ரூமிற்கு எதிரே நின்றுகொண்டிருந்தது. போய் விசாரித்தேன் . ” இது மெம்பர்களுக்கு மட்டும் தான் சார். நீங்க வேண்ணா போய் எங்க நூலகத்திலே கேளுங்கள் ” என்றார் அங்கிருந்தவர்.

அப்படித்தான் ” கார்முகில் ” வாடகை நூல் நிலையம் அறிமுகம் ஆனது. தமிழின் முக்கிய எழுத்தாளர்களை அங்கு தான் வாசித்தேன் . சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப அப்டேட்டான நூலகம் . அப்போ வெறும் 200 ரூபா தான் முன்தொகை . அந்த ரூபா மதிப்புக்குத்தான் புத்தகம் தருவோம் என்றும் சொன்னார்கள் . போகப்போக நமது வாசிப்பு ஆர்வத்தை பார்த்து விட்டு விரும்பிய புத்தகத்தை தந்தார்கள் . திருச்சியில் இருந்து கிளம்பிய பின்னர் நண்பர் ஒருவரிடம் , புத்தகம் எடுக்கும் உரிமையை கை மாற்றிவிட்டு வந்தேன்.

திருச்சி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேராக ஒரு ரோடு சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டை பாத்து போகுதில்லையா , அதுல ரயில் நிலையத்து ரவுண்டானாவிலிருந்து  இடது பக்கம் கொஞ்சம் தூரத்திலேயே இருக்கும். திருச்சிக்காரங்க போய் பயன்படுத்திக்கொள்ளுங்கள் .

*

ரெண்டு வாரத்திற்கு முந்தி , நொச்சூர் P .H . ரமணி அவர்கள் பாடுகிற பரதநாட்டிய அரங்கேற்றம் ஒன்றிற்கு போயிருந்தேன் . தானேவில் இருந்து பவார் நகர் போகும் வழியில் ஹிராநந்தினி மீடோசில் இருந்தது அந்தக்கலையரங்கம் ( Dr Kashinath Ghanekar Sabhagruha ) . தானேவின் பெருமைகளில் ஒன்று.

நிகழ்ச்சி வழக்கம் போல அருமை . P .H . ரமணி என்னை தன்னுடைய குடும்பத்தில் ஒருவனாக நினைப்பவர் . மும்பை வந்துதான் பழக்கம். தானேவில் செட்டில் ஆன பாலக்காட்டுக்காரர். எல்லா நிகழ்ச்சிக்கும் கூப்பிடுவார். மரபான சங்கீதம் மீதும் , அவர் மீதும் மரியாதை கொண்டவன் என்பதால் பெரும்பாலும் போக முயற்சி செய்வேன்.

நிகழ்ச்சிக்கு பின்னர் பஸ் ஏற நடந்து வரும் போது தான் இந்த கடை கண்ணில் பட்டது. Rent , Read , Return என்ற அதன் வாசகம் ஈர்க்கவே உள்ளே சென்றேன்.

அற்புதம். ஒரு தேர்ந்த ஷோரூம் போல இருந்தது கடை . நல்ல கலக்சன் . வாசிப்பை ஊக்குவிக்க அவர்கள் செய்யும் சேவை வியக்க வைக்கிறது.

தனித்தனி திட்டங்கள் உண்டு. நான் ஒரு புத்தகம் எடுக்கும் திட்டத்தை தேர்ந்தெடுத்தேன். 500 ரூபாய் முன்தொகை ( மூன்று மாதங்கள் கண்டிப்பாக திட்டத்தில் இருக்க வேண்டும், அதன் பின்னர் விலகினால் தொகை திரும்ப தரப்படும் ) . ஒருமுறை பதிவுக்கட்டணம் 250 , ஒருபுத்தகம் என்றால் மாதம் ரூபாய் 150 மட்டும் வாடகை .

என்னளவில் மிகச்சிறந்த திட்டம் . தாமதக்கட்டணம் , கெடுத்தேதி என்று எதுவும் கிடையாது. நிதானமாக படிக்கலாம் ( வாடகையை மட்டும் கட்டி வந்தால் போதும் ) .

அவர்கள் வலையை மேய்ந்த போது தமிழில் ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் இருப்பதை பார்த்தேன் . நான் அன்று நூலகத்தில் பார்த்த போது இல்லை , சும்மனாச்சுக்கும் புத்தகம் வந்தால் தெரியப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் வைத்துவிட்டு மறந்தும் விட்டேன். நேற்று போன் பண்ணி, “சார் நீங்க கேட்ட புத்தகம் வந்து விட்டது . தனியே எடுத்து வைத்திருக்கிறேன் , எப்போ வாறீங்க” என்றார். உடனே போய் வாங்கி வந்துவிட்டேன் .

9 நகரங்களில் கிளைகள் உண்டு.

பெங்களூரு தான் மெயின் ஆபிஸ் போல . ஏராளமான கிளைகள். நமது பெங்களூரு நண்பர்கள் முடிந்தால் ஒரு விசிட் அடித்துப்பாருங்களேன் .

எங்க ஊர் கழுகுமலை

எங்க ஊர் கழுகுமலை , பல தனிச்சிறப்புகளை உள்ளடக்கியது .

பல்வேறு  குழுவினர் எங்கள் ஊரைப்பார்த்து வியந்து எழுதிய கட்டுரைகளை மகிழ்வுடன் பகிர்கிறேன்.

வரலாறு இணைய இதழில் கழுகாசலமூர்த்தி திருக்கோவில்  ( முதலில் எட்டயபுரம் பாரதி நினைவுச்சின்னங்கள் குறித்து கொஞ்சம் எழுதியிருப்பார்கள் ) , அப்படியே வெட்டுவான் கோவில்  பற்றி எழுதியதையும் படித்து விடுங்கள் .

நண்பரும் ஓவியருமான ரஞ்சித் , தனது விதானம் தளத்தில் வெட்டுவான் கோவிலின் ஒரு புடைப்புச்சிற்பம் பற்றி ஓவியத்துடன் குறிப்பு ஒன்றையும் தீட்டியுள்ளார் .

கீற்று இணைய இதழும் எங்கள் ஊரினைப்புகழ்கிறது.

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து எங்கள் ஊருக்கு மட்டுமே கிடைத்த பொக்கிஷம் .

மேலும் தகவல்கள் கிடைக்கும் போது வலையேற்றுகிறேன் .

 

.

ஈடு செய்ய முடியா இழப்பு

எங்கள் குரு , திரு. நீதிமாணிக்கம் சார் அவர்கள் மார்ச் 15 ஆம் தேதி இயற்கை எய்தினார்கள்.

எங்கள் தமிழாசிரியரின் வீடு கட்டும் வேலை நடந்து கொண்டிருந்த போது, என்னையும் ரஞ்சித்தையும் அவர் நீதி மாணிக்கம் சாரிடம் ” பெரியப்பா , இவங்க நம்ம பசங்க . கொஞ்சம் ஷேர் மார்க்கட், கம்யுனிசம் பத்தி எல்லாம் சொல்லிக்கொடுங்க ” என்று ஒப்படைத்தார்.

அன்றிலிருந்து அவருடைய வீடு , எனது குருகுலம்.

என்னால் இப்போது அதிகம் எழுத முடியவில்லை. ஆனால் அவருடன் நடந்த நாட்களை நிச்சயம் பதிவு செய்வேன்.

இந்த 2012  – உலகத்துக்கு கெடுதலோ என்னவோ , எனக்கு கண்டிப்பாக Disaster .

முதலில் அம்மா , இப்போது குரு.

சித்திரவீதிக்காரன்

மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்

வண்ணதாசன்

வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)

நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.

சொல் புதிது!

கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவட்டும்!

மனம் போன போக்கில்

N. Chokkan (என். சொக்கன்)